பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரசலூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் கந்தன் வயது 57 சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மார்ச் 23ஆம் தேதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் பெரம்பலூரில் வசித்து வருகின்றனர். கந்தனின் இறப்பு செய்தி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடலை மீட்டு தரக்கோரி கோரிக்கை விடுத்தனர்.
உடலை மீட்டு கொண்டு வருவதில் பணிகள் தொய்வாக நடைபெற்று வந்த நிலையில் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் உடலைக் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்தது.
இதனிடையே இறந்த கந்தனின் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் சவுதி மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடலை கொண்டுவர முயற்சி மேற்கொண்டனர்.
அதன்படி சவுதி அரேபியா ரியாத் மத்திய மண்டல பொறுப்பாளர்கள் அப்துல் ஹமீது மற்றும் நூர் முகமது ஆகியோர் இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசி உடலைக் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று சரக்கு விமானம் வாயிலாக அனுப்பி வைத்தனர். விமானத்தில் வந்த உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் குழுவினர் பெற்றுக்கொண்டு அரசலூர் கிராமத்திற்கு கொண்டுவந்து கந்தனின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
வெளிநாட்டில் இறந்த இந்து ஒருவரின் உடலை இஸ்லாமியர்கள் மீட்டுக் கொண்டு வந்த சம்பவம் மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இருந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.