கரோனா பரவல் எதிரொலி காரணமாக, அனைத்து பல்கலைக்கழகங்களின் வகுப்புகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுவதால், எஃப்-1, எம்-1 விசா பெற்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இனி ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடம் நடத்தப்படும் என்பதால், அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கும் மாணவர்கள் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது ஆன்லைன் முறையில் அல்லாமல் நேரடியாக மாணவர்களுக்கு கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில் தங்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமென அந்நாட்டு குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பிற்குள்ளாகி இருக்கும் இந்திய மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய மாணவர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக சின்சினாட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜூனியர் பயோ பொறியியல் மாணவி வர்தா அகர்வால் கூறுகையில்," கடந்த செமஸ்டரில் எங்களுக்கு வழங்கப்பட்ட விலக்குகளை அமெரிக்க அரசு நீக்கிய பின்னர், அமெரிக்காவில் இனி எங்களது எதிர்காலம் நிச்சயமற்றதாகி உள்ளது.
கோவிட்-19 அச்சுறுத்தல் பூதாகரமாகி உள்ள இந்தச் சூழலில் எனது குடும்பத்தைப் பிரிந்து, இங்கே நிற்கும் நான் அடுத்ததாக இப்போது விசா மற்றும் கல்வி குறித்து கவலைப்பட வேண்டிய சூழலுக்குள்ளாகி இருக்கிறேன்.
பல சர்வதேச மாணவர்கள் இதேபோல் பாதிக்கப்படுகின்றனர். மேலும், புதிய கொள்கைகள் நியாயமற்றவை என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவில் பயின்றுவரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு அடுத்த செமஸ்டருக்கு விசாக்கள் வழங்க வாய்ப்பில்லை என அறிய முடிகிறது.
அத்தகைய மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றால் அவர்கள் கல்வி வாய்ப்பு பறிபோகும் என்பது உறுதி" என வேதனையோடு கூறினார். மாணவர்களின் நிலை தொடர்பாக அமெரிக்க குடிவரவு வழக்குரைஞர் மஞ்சுநாத் கோகரேயிடம் கூறுகையில், " அமெரிக்க அரசின் இந்தப் புதிய கொள்கைகள் குடியேற்றத்தை குறைக்கவோ அல்லது பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க கட்டாயப்படுத்தவோ தான் அமல்படுத்தப்படுவதாக நான் கருதுகிறேன்.
இது நிச்சயமாக டிரம்ப் நிர்வாகத்தின் அரசியல் உத்தியாக தான் நாம் பார்க்க வேண்டும். இந்தப் புதிய குடிவரவுக் கொள்கைகள் கூட்டாட்சி பதிவேட்டில் இன்னும் வெளியிடப்படாததால், இது குறித்த அச்சத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்.
ஹார்வர்ட், எம்ஐடி போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடுத்திருக்கின்றன. அவர்களின் சட்ட நடவடிக்கைகள் இந்தக் கொள்கைகள் நடைமுறைக்கு வருவதைத் தடுத்து நிறுத்தும்" என்கிறார்.
இந்திய மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 40 பில்லியன் டாலர் பங்களிப்பு செய்து வருகின்றனர். மேலும், படித்துக்கொண்டே வேலை செய்துவரும் 4 லட்சம் இந்திய மாணவர்களால் நாட்டின் பொருளாதார நிலைமையும் உயர்ந்துள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக என்.ஏ.எஃப்.எஸ்.ஏ ஆய்வு கூறுவது கவனிக்கத்தக்கது.