கொடைக்கானல் மன்னவனூர் எழும்பள்ளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பெருமாள்சாமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "மன்னவனூர் எழும்பள்ளம் கண்மாய் மூலமாக 150 பேர் விவசாயம் செய்து வருகின்றனர். எழும்பள்ளம் கண்மாயில் குடி மராமத்து பணிகளை மேற்கொள்ள 90 லட்ச ரூபாய் மதிப்பீடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொடைக்கானல் மன்னவனூர் பெருமாள்சிரை வாய்க்கால் எழும்பள்ளம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்துரைக்கு அரசியல் தலையீடு காரணமாக சட்டவிரோதமாக இந்த குடிமராமத்து பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே கொடைக்கானல் மன்னவனூர் எழும்பள்ளம் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
மேலும், கொடைக்கானல் மன்னவனூர் பெருமாள்சிரை எழும்பள்ளம் பாசன விவசாயிகள் சங்கத்திற்கு குடிமராமத்து பணிகளை ஒதுக்கீடு செய்த அரசாணையை ரத்து செய்து, முறையாக குடி மராமத்து பணிகளை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கொடைக்கானல் மன்னவனூர் எழும்பள்ளம் கண்மாய் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்தும், இது தொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலர், செயற்பொறியாளர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.