கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல தளர்வுகளுடன் வருகிற ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கிய போதிலும், சர்வதேச விமான சேவைக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ’வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து ,கத்தாா், துபாய் ஆகிய நாடுகளில் சிக்கித் தவித்த 510 போ் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
இதில், லண்டனிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் மூலம் நேற்று இரவு 150 பேரும், கத்தாா் நாட்டில் தோகா நகரிலிருந்து இண்டிகோ தனியாா் சிறப்பு விமானம் மூலம் நேற்று இரவு 179 பேரும், துபாயிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று இரவு 181 பேரும் சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர்.
சென்னை திரும்பிய அனைவருக்கும் சுங்கப் பரிசோதனைகள், கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு சிலர் அரசு கரோனா மையங்களுக்கும், சிலர் தனியார் விடுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாநகராட்சி அலுவலர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க : சசிகலா விடுதலை எப்போது? - சிறை நிர்வாகம் விளக்கம்