சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவு வந்த இரண்டு சிறப்புத் தனி விமானங்களில் தமாம், மஸ்கட்டிலிருந்து 314 இந்தியா்கள் சென்னைக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டனா்.
தமாமிலிருந்து ஏா் இந்தியா சிறப்புத் தனி விமானம் மூலம் நள்ளிரவு 12 மணிக்கும், மஸ்கட்டிலிருந்து சிறப்புத் தனி விமானம் நள்ளிரவு 12.30 மணிக்கும் சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்தன.
இந்த இரண்டு விமானங்களிலும் மொத்தம் 314 இந்தியா்கள் வந்தனா். அவா்களில் 238 ஆண்கள், 57 பெண்கள், 17 சிறுவா்கள், இரண்டு குழந்தைகள் வந்தனர். சென்னை விமானநிலையத்தில் அவா்களை தமிழ்நாடு அரசு அலுவலர்கள் வரவேற்றனா். அதன்பின்பு அவா்களை தகுந்த இடைவெளியுடன் வரிசைப்படுத்தி, மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்க சோதனைகள் நடத்தப்பட்டன.
பின்பு அவா்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.
பின்னர் அவா்களில் 23 போ் இலவச தங்கும் இடத்திற்கு விருப்பம் தெரிவித்தனா். அவா்களைத் தனி பஸ்சில் மேலக்கோட்டையூரில் உள்ள தனியாா் கல்வி நிறுவனத்திற்கு அனுப்பினா். கட்டணம் செலுத்தி தங்கும் இடம் கேட்ட 189 போ்களை தனி பஸ்களில் சென்னை நகரில் உள்ள நான்கு சொகுசு விடுதிகளுக்கு அனுப்பினா்.
அதேசமயம் மஸ்கட்டிலிருந்து வந்த சிறப்புத் தனி விமானப் பயணிகளில் கா்நாடகா மாநிலத்தைச் சோ்ந்த ஒரு கணவன், மனைவி இருந்தனா். அதில் மனைவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், அவா்கள் இருவரையும் தனி ஆம்புலன்சில் பெங்களூரு அனுப்பி வைத்தனா்.