இது தொடர்பாக குடியரசுக் கட்சி (Republican Party of the United States) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளரை முறைப்படியாக அறிமுகப்படுத்தும் மாநாடு ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை, புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் நடைபெறும்.
அரசியல் கல்விக்கான இந்திய-அமெரிக்க மன்றத்தின் தேசியத் தலைவரும், நீண்டகால குடியரசுக் கட்சித் தலைவருமான சம்பத் சிவாங்கி, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளரை முறையாகப் பரிந்துரைக்கும் தேசிய மாநாட்டின் (ஆர்.என்.சி) பிரதி நிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மருத்துவர் சம்பத் சிவாங்கி, " நடைபெறவிருக்கும் குடியரசுக் கட்சியின் இந்த வேட்பாளர் அறிமுக மாநாடும், வரவிருக்கும் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலும் நமது தேசத்திற்கு வரலாற்று ரீதியான திருப்பமாக இருக்கப்போகிறது. இந்தியாவிற்கும் உலகம் முழுமைக்குமாகவும் பெரும் திருப்புமுனையாக இருக்கும்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் எனது பங்களிப்பையும் செலுத்த முடியும் என்பதை நானும் நம்புகிறேன். குடியரசுக் கட்சியின் இந்த அறிவிப்பால் நான் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ச்சியாக ஐந்து முறை ஆர்.என்.சி தூதுக்குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரே இந்திய-அமெரிக்கன் நான் என்பது அமெரிக்க இந்தியர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது" என்றார்.
2004ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் அதிபர் வேட்பாளராக ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷையும், 2008ஆம் ஆண்டில் மினசோட்டாவின் மினியாபோலிஸில் நடந்த மாநாட்டில் ஜான் மெக்கெய்னையும், 2012ஆம் ஆண்டில் புளோரிடாவின் தம்பாவில் நடைபெற்ற மாநாட்டில் ஆளுநர் மிட் ரோம்னியையும், 2016ஆம் ஆண்டில் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பையும் அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவித்தது மருத்துவர் சம்பத் சிவாங்கி என்பது கவனிக்கத்தக்கது.
தேசிய மாநாட்டின் பிரதிநிதியாக, சிவாங்கி தொடர்ச்சியாக, ஐந்தாவது முறையாக நியமிக்கப்படுவது அமெரிக்க இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.