இங்கிலாந்தில் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், தொடங்குவதற்கு முன்னதாக, தற்போது பயிற்சி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தனது முதல் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது. ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல்.ராகுல் என முன்கள பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர்.
இந்நிலையில், இந்திய அணி, கார்டிஃப் நகரில் நாளை நடைபெறவுள்ள தனது கடைசி பயிற்சிப் போட்டியில் வங்கதேசத்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. முதல் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு நாளை போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள், இப்போட்டியைக் காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கார்டிஃப் நகரில் நாளை இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.