ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வடக்குப்பேட்டை சந்தன டிப்போ மேற்கு வீதியில், குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனம் கடந்த ஓராண்டாக இயங்கிவந்துள்ளது.
இந்த நிறுவனத்தில் கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குநராகவும், கடம்பூர் மலைப்பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரகாஷ், கவுந்தப்பாடி ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகிய மூன்று பேர் பங்குதாரர்கள் இருந்துள்ளனர்.
அந்த நிறுவனத்தில் ரிலீப் ஹெர்பல்ஸ் (Relief Herbals )என்ற பெயரில் மூலம், பவுத்திரம், ஆண்மைக்குறைவு மருந்து உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகளை டீலர்கள் ஆன்லைனில் விற்பனை செய்துவந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் வழங்க உள்ளதாகவும், ஒரு லட்சம் பணம் செலுத்தினால் நூறு நாட்களுக்குள் ரூ.2500 வீதம் ரூ.2.50 லட்சம் வழங்குவதாக ஆன்லைனில் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
முதலில் பணம் செலுத்திய முதலீட்டாளர்களுக்கு தினமும் அவர்களது வங்கி கணக்கில் ரூ.2500 செலுத்தியதால், இதை நம்பி பலரும் முதலீடு செய்தனர். மேலும், பணம் செலுத்தியதற்கு உத்தரவாதமாக 20 ரூபாய் மதிப்பு ஸ்டாம்ப் காகிதத்தில் ஒப்பந்தம் எழுதிக்கொடுத்ததோடு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக முதலீடு செய்தவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படாததால் அவர்கள் பணத்தை திருப்பித்தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இதனால் தங்கராஜ், ஆனந்த், பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் தலைமறைவானார்கள்.
இது குறித்து சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தங்கராஜின் தந்தை துரைசாமி, முதலீடு செய்தவர்களுக்கு காசோலை வழங்கிய சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பொன்னுசாமி உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும் முக்கிய குற்றவளிகளாக கருதப்படும் தலைமறைவான அந்த மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சுமார் ரூ.15 கோடி வரை மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மூன்று பேர் மட்டும் தற்போது புகார் கொடுத்த நிலையில் பணத்தை கட்டி ஏமாந்த நபர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளதாக சத்தியமங்கலம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.