கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்துகொண்டார்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கன்னியாகுமரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை இருக்கக்கூடாது என்பதற்காக பவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு அழகியபாண்டியபுரம், இரணியல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இரணியல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் 60 விழுக்காடு நிறைவடைந்த நிலையில் வாள்வச்சகோஷ்டம் அரசுப் பள்ளி வளாகத்தில் பெரிய சம்ப் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் புத்தன்துறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தினமும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மாவட்டத்தில் உள்ள 55 பேரூராட்சிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள பம்ப், குடிநீர் குழாய்களை சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களையோ, எங்களையோ நேரடியாக அணுகலாம்" என தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் பேருராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன், பேருராட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.