இலங்கையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் நேற்று சென்னைக்கு வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது யாசர் அராஃபத் (25), ஜகீர் உசேன் (34) ஆகியோர் ஆடைக்குள் மறைத்து வைத்து 340 கிராம் தங்கத்தை கடத்த முயற்சித்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து சுங்கத் துறையினர் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 11.1 லட்சம் என சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இருந்து எத்தியாட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னைக்கு வந்தது. இதில், பயணிகளை சோதனை செய்த சுங்கத் துறையினர், ஆந்திரா மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த பாஷா மொகிதீன் (35) என்பவரிடமிருந்து பழச்சாறு பிழியும் கருவி மூலம் 5.42 லட்சம் மதிப்புள்ள 175 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று சென்னைக்கு வந்தது.
இதில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதக்கத்துல்லா (46) என்பவரிடம் சுங்கத் துறையினர் சோதனை செய்ததில், அவர் உள்ளாடைக்குள் 443 கிராம் தங்கக் கட்டிகளை கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ. 14. 5 லட்சம் மதிப்புள்ள இந்தத் தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதன் மூலம் நேற்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ. 31 லட்சம் மதிப்புள்ள 958 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதை கடத்த முயன்ற முகமது யாசர் அராஃபத், ஜகீர் உசைன், பாசா மொகிதீன், சதக்கத்துல்லா ஆகியோரை சுங்கத் துறை அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.