சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் 1975ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தி வருகிறது. இதில், 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்னும் 13 நாட்களில் தொடங்கவுள்ளது.
இந்தத் தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், இந்தத் தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், உலகக் கோப்பை வரலாற்றிலேயே இம்முறை கோப்பையை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28.08 கோடி) வழங்கப்படவுள்ளது. அதேபோல், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர்கள் (ரூ. 14.04 கோடி) வழங்கப்படவுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து மூன்றாவது, நான்காவது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா 8, 00,000 லட்சம் டாலர்கள் (ரூ. 5.61 கோடி) என இந்தத் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை 10 மில்லியன் டாலர்கள் ( ரூ. 70. 21 கோடி) ஐசிசி அறிவித்துள்ளது. வரும் மே. 30 முதல் ஜூலை 14 வரை நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 46 போட்டிகள், 11 மைதானங்களில் நடைபெறவுள்ளது. தற்போது ஐசிசி பரிசுத் தொகையை அறிவித்துள்ளதால், இந்தத் தொடரை எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.