திமுகவின் விவசாய அணியின் மாநிலச் செயலாளராக இருந்தவர், கே.பி.ராமலிங்கம்.
கடந்த மாதம் திமுகவின் கொள்கைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று ராசிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் "திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து நாள்தோறும் என்னைப் பல்வேறு மாநில மற்றும் தேசிய கட்சியினர் அவர்களது கட்சியில் இணையுமாறு அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். நான் அவர்களுடன் நாள்தோறும் பேசி வருகிறேன். எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞரை வசைபாடாத கட்சியில் மட்டும்தான் நான் சேருவேன். இப்போது மட்டுமல்ல எப்போதுமே எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும், அவர்களை இழிவுபடுத்தும் அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.
விவசாயிகளின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி, போராடக் கூடிய கட்சியாக அது இருக்கும்.
கரோனா வைரஸ் நெருக்கடி முடிவுக்கு வந்த பிறகே, தன்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வு அறிவிக்கப்படும்.
கரோனா காலத்தில் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியது போல விவசாயிகளுக்கும் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக மத்திய - மாநில அரசுகள் இடைக்கால நிவராணம் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
முன்னாள் திமுக விவசாய அணியின் மாநிலச் செயலாளர் கே.பி.ராமலிங்கம், இயற்கை நீர் வள பாதுகாப்பு இயக்கம் என்ற விவசாய அமைப்பைத் தோற்றுவித்து, அதன் தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.