12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில், 176 ரன் இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 2.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த இக்கட்டான தருணத்தில், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹெட்யமர் - குர்கீரத் சிங் மான் சிறப்பாக ஆடினர்.
குறிப்பாக, இந்தத் தொடரில் பெரிதும் சோபிக்காத ஹெட்மயர், இப்போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். மறுமுனையில், குர்கீரத் சிங் மானும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவ்விரு வீரர்களும் நான்காவது விக்கெட்டுக்கு 144 ரன்களை சேர்த்த நிலையில், ஹெட்மயர் 47 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் நான்கு விக்கெட்டுக்கு அதிக ரன்களை சேர்த்த ஜோடி என்ற புதிய சாதனையை இந்த இணை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நான்காவது விக்கெட்டுக்கு அதிக ரன்களை குவித்த ஜோடிகள்:
- ஹெட்மயர், குர்கீரத் சிங் மான் - 144 ரன்கள், ஹைதராபாத் அணிக்கு எதிராக
- டி வில்லியர்ஸ் , யுவராஜ் சிங் - 132 ரன்கள், ராஜஸ்தான் அணிக்கு எதிராக
- ரோகித் ஷர்மா, கோரி ஆன்டர்சன் - 131 ரன்கள், கொல்கத்தா அணிக்கு எதிராக,
- கெயில், டி வில்லியர்ஸ் - 131 ரன்கள், பஞ்சாப் அணிக்கு எதிராக
கொடுத்த காசுக்கு இந்தப் போட்டியில்தான் ஹெட்மயர் சிறப்பாக ஆடினார் என ஆர்சிபி ரசிகர்கள் இணையதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில், ஹெட்மயரை ஆர்சிபி அணி ரூ. 4 கோடி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.