ஊரடங்கின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி மூலம் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் அனைத்து நீதிபதிகளும் காணொலி முறையில் விசாரணை நடத்திய நிலையில், நீதிபதிகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தற்போது குறிப்பிட்ட நீதிபதிகள் மட்டுமே அவசரகால வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அனைத்து வழக்குறைஞர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில் வருகிற ஜூலை 6ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சென்னையில் உள்ள மற்ற நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து காணொலி முறையிலேயே வழக்கை விசாரிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜூலை 6ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து நேரடி விசாரணை முறையை மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்கு விசாரணையின் போது மனுதாரர்களை அனுமதிக்க தேவையில்லை என்றும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்குறைஞர்களின் விருப்பத்திற்கேற்ப காலை நேரத்தில் நேரடி விசாரணையும் மதியத்திற்கு பிறகு காணொலி முறையை மேற்கொள்ள வேண்டும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டு நூறு நாள்கள் ஆகிவிட்டதாவும் அமல்ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.