லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தலைமையிலான இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு, கோவிட் - 19 நோயாளிகளின் ரத்தத்தில் மிக அதிக அளவு மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் கொண்டிருந்தால், அவர்களின் உடல்நிலை விரைவாக மோசமடைந்து இறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சி பேராசிரியர் வால்ஜித் தில்லோ தலைமையில் நடந்த ஆய்வின்படி, கார்டிசோலின் அளவு கோவிட்-19 நோயின் தீவிரத்தைக் குறிக்கிறது. கார்டிசோல் என்பது மன அழுத்தத்தை சமாளிக்க உடலால் தூண்டப்படும் ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும்.
கார்டிசோலின் அளவை வைத்து நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறதா என்ற முடிவை மருத்துவர்கள் எடுக்க முடியும் என்று ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமாகவும் ஓய்வாகவும் இருக்கும்போது நமது கார்டிசோலின் அளவு 100-200 என்.எம் / எல் இருக்குமென்றும், நாம் தூங்கும்போது கிட்டத்தட்ட '0' அளவில் இருக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
நோயாளிகளுக்கு கார்டிசோலின் அளவு குறைவாக இருக்கும்போது, அது உயிருக்கு ஆபத்தானதாக அமையும். அதேவேளையில் நோயின் போது கார்டிசோலின் அதிகப்படியான அளவு நோயாளிகளுக்கு சமமான பாதிப்பை உண்டாக்கும். இது தொற்று நோய்க்கான ஆபத்து மற்றும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.