தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதிதாக ஒரு சாலை அமைத்தல் அல்லது சாலை விரிவாக்கம் உள்ளிட்ட எந்தவிதமான பணிகளைத் தொடங்கினாலும் அப்பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.
இந்நிலையில், 2013ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அறிவிப்பாணையின்படி சாலை விரிவாக்கத்தின்போது 100 கிலோ மீட்டருக்குள் விரிவாக்கம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறத் தேவையில்லை என அந்தத் திருத்தம் கூறியுள்ளது. இதனால், பல்வேறு மரங்கள் வெட்டப்பட்டு, சுற்றுச் சூழல் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த 2013ஆம் ஆண்டு திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார் .
இந்த மனு, இன்று (ஆக. 28) நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவால், புதிய சாலைப் பணிகளுக்காக கடந்த 20 ஆண்டுகளில் பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், கூறியபடி மரக்கன்றுகள் நடப்படுவதில்லை. இதனால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படலாம்.
எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.