தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஹசிம் அம்லா, தலைசிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் கோலி படைக்கும் சாதனையை முறியடிப்பதே இவர் வழக்கமாக வைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமான 5,000, 6,000, 7000 ரன்களை விளாசிய முதல் வீரர் என கோலி படைத்த சாதனையை, அம்லா எளிதாக முறியடித்தார். இதனால், இவ்விரு வீரர்களுக்கும் சாதனை படைப்பதில் போட்டி இருந்துக்கொண்டு வருகிறது.
ஆனால், தற்போது அம்லா ஒருநாள் கிரிக்கெட்டில் 8000 ரன்களை வேகமாக எடுத்த வீரர் என விராட் கோலி படைத்த மற்றொரு சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை நூலளவில் இழந்துவிட்டார்.நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 24 ரன்களை எட்டிய அம்லா, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 8000 ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
நிதனாமாக ஆடிய அவர், இப்போட்டியில் நான்கு பவுண்டரிகள் உட்பட 55 ரன்கள் குவித்த பின்னர் ஆட்டமிழந்தார். இதுதவிர, ஒருநாள் கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்த நான்காவது தென்னாப்பிரிக்க வீரர் ஆனார்.
கோலி இச்சாதனையை படைக்க 175 இன்னிங்ஸை எடுத்துக்கொண்ட நிலையில், அம்லா தனது 176ஆவது இன்னிங்ஸில் இதனை எட்டியுள்ளார். கடந்த சில வருடங்களாக விராட் கோலி தனது அபாரமான ஃபார்மால், ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 9,000,10,000, 11,000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது அம்லா, கோலி படைத்த 9,000 ரன்கள் சாதனையை விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.