சென்னை செங்குன்றம் அடுத்த பாலவாயல் சோத்துப்பாக்கம் சாலையில் நேற்று (ஜூன் 10) இரவு காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை காவல் துறையினர் மடக்கி சோதனை செய்தனர். அதில், பண்டல் பண்டலாக ஹான்ஸ் எனப்படும் குட்கா பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, திருவள்ளுர் மாவட்டம் தேவம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜி (39) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த போதை பொருள் பெங்களூருவிலிருந்து லாரி மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தற்பொழுது செங்கல்பட்டில் உள்ள பரணுருக்கு கொண்டுச் செல்வதாகவும் கூறினார்.
இதைத் தொடர்ந்து மினி வேனை பறிமுதல் செய்த செங்குன்றம் காவல் துறையினர், ஓட்டுநர் ராஜி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்திவரப்பட்ட குட்கா பொருள்களின் மதிப்பு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இருக்கும் என செங்குன்றம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜவகர் பீட்டர் தெரிவித்தார்.