இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,
"வெளிமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மக்களால் புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. புதுச்சேரியில் தற்போது அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆதலால், புதுச்சேரி மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட், மீண்டும் குபேர் அங்காடி செல்வதால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணத்தில் 50 பேர் கலந்து கொள்ளலாம். அதை திருமண மண்டபங்களில் நடத்த அனுமதிக்கப்படும்.
அனைத்து வங்கி அலுவலர்களையும் அழைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எந்தவித உத்திரவாதம் இன்றி ரூ. 50 ஆயிரம் கடனுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த புகாரையும் விசாரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வேளையில் கிரண்பேடி ஈடுபட்டு வருகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனநாயகத்தை மதிக்காமல் விதிமுறைகள் பற்றிக்கூட கவலைப்படாமல் புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.