ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பழைய நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (51). செக்யூரிட்டியாக பணியாற்றிவருகிறார். அவரது மகள் ரேவதி (21). சிறிது சிறிதாக நகைகளை சேர்த்து வைத்தால்தான் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்று பெற்றோர்கள் பேசி கொண்டிருப்பதை ரேவதி தெரிந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று திருவேற்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று நகைகளை வாங்குவதற்காக ரேவதியின் பெற்றோர் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரேவதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து வீடு திரும்பிய பெற்றோர் தொலைபேசி மூலம் ரேவதியை தொடர்புகொண்டும் , அவரிடமிருந்து பதிலில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தவரைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் .
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமமங்கலம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில் திருமணத்திற்காக தனது பெற்றோர் நகைகளை சேர்ப்பதற்கு படும் துன்பத்தை கண்ட ரேவதி மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.