கோயம்புத்தூர் மாவட்டம் மாங்கரை வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது இந்த வனப் பகுதியில் அதிகளவில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், அவற்றை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாயில் அடிபட்ட நிலையில் சுற்றித்திரியும் மக்னா யானை இந்த பகுதிக்குள் வர வாய்ப்புள்ளதால் தமிழ்நாடு - கேரள எல்லையான தூமனூர், சேம்புகரை பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆனைகட்டி செல்லும் சாலையில் நேற்று (ஆகஸ்ட் 20) வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூமனூர் மலை கிராமத்திற்கு செல்லக்கூடிய பாதை அருகே காட்டு மாடு உயிரிழந்து இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து வனத்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனினும் மாலை நேரம் ஆனதாலும், யானைகள் நடமாட்டம் அதிகரிக்கும் என்பதாலும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வர முடியவில்லை. இதனால் உயிரிழந்த காற்று மாட்டின் உடலை இன்று (ஆகஸ்ட் 21) காலை மருத்துவ குழுவினர் உடற்கூறாய்வு செய்ய உள்ளனர்.