உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் தோனி, ராணுவ முத்திரையை தனது விக்கெட் கீப்பிங் க்ளவுஸில் பயன்படுத்தினார்.
இதையடுத்து, தோனி உடனடியாக தனது விக்கெட் கீப்பங் க்ளவுஸில் ராணுவ முத்திரையை நீக்க வேண்டும் என ஐசிசி, பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் பிசிசிஐ மட்டுமல்லாது இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜூ உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் தோனிக்கு துணை நின்றனர்.
இதையடுத்து, உலகக் கோப்பை தொடரில் தோனி தனது க்ளவுஸில் முத்திரையை பயன்படுத்துவதற்கு ஐசிசி அனுமதி வழங்க வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியிருந்தது. இதனால், பல்வேறு சர்ச்சைகள் ஏற்படும் என்ற காரணத்தால் ஐசிசி இதற்கு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிழக்கு டெல்லி எம்பியுமான கம்பிர் கூறுகையில், "இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்வதில்தான் ஐசிசி கவனம் செலுத்த வேண்டும். ராணுவ முத்திரைப் பதிந்த விக்கெட் கீப்பிங் க்ளவுஸுக்குதான் ஐசிசி அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள். யார் எந்த முத்திரைக் கொண்ட விக்கெட் கீப்பிங் க்ளவுஸை பயன்படுத்துகிறார்கள் என்று நோட்டம் பார்ப்பது ஐசிசியின் வேலையல்ல" என்றார்.