தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் உள்ள ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு அண்மையில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தற்போது வரை 10க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சமூகப்பரவல் காரணமாக பெரியகுளம் பகுதியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக பெரியகுளம் வணிகர்களுடனான ஆலாசனைக்கூட்டம் நடைபெற்றது. பெரியகுளம் நகராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கரோனா நோய்த்தடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தேவராஜ் தலைமையில், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், வணிகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில்,' இன்று (ஜூன் 15) முதல் நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்ட 22ஆவது வார்டு, அதன் சுற்றுப்பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, எந்தவொரு கடைகளும், வணிக நிறுவனங்களும் செயல்பட அனுமதி கிடையாது. மற்றப் பகுதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
அப்பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்வதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அனைவரும் முகக்கவசம், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை உறுதிபடுத்த வேண்டும்' என நகராட்சி அறிவித்துள்ளது.
நகராட்சியின் இந்த அறிவிப்பை மீறுபவர்களுக்கு உடனடி அபராதமும், காவல் துறையின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் நகராட்சியின் இந்த அறிவிப்பிற்கு பெரியகுளம் பகுதி வணிகர்கள் முழு ஆதரவைத் தெரிவித்தனர்.