அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லாத பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் புத்தகங்களைக் கட்டி தனியாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், 15 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாணவர்கள் எந்தத் தினத்தில் புத்தகங்களைப் பெற பள்ளிக்கு வர வேண்டும் என்பதை முன்கூட்டியே மாணவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் குறிப்பிட்ட நாளன்று ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் என்கிற அளவில் மாணவர்களை வரவழைத்து தகுந்த இடைவெளியுடன் பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும்.
புத்தகங்கள் வழங்கும் இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொண்டு, அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள், அவர்கள் பகுதிகளில் பாதிப்பு நீங்கியபிறகு, மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து பாடப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வரும் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோக்கள் மூலம் பாடங்களைக் கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியில் பாடங்கள் சார்ந்த வீடியோக்கள் பதிவுசெய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.