சாலையோரம் பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து நிற்கும் வாகனங்களிலும், பழைய டயர் உள்ளிட்ட பொருள்களாலும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு அதிக அளவில் உற்பத்தியாகுவதாகவும், அதனால் இந்த பழுதடைந்த வாகனங்கள், டயர்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் கடந்தாண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “டெங்கு காய்ச்சலை விட தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும், இதை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு கூறுகிறது.
ஆனால், தரமான முகக்கவசம் 25 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், அதுவும் 6 மணி நேரம் தான் அதை பயன்படுத்த வேண்டும் என்று சுகாதார அமைப்பு கூறுவதால், ஏழைகள் 30 நாள்களுக்கு 750 ரூபாய் செலவு செய்து இதுபோன்ற முகக்கவசத்தை வாங்க முடியாது என்பதால், பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதேபோல தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும்” என்று வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.