தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்று பாதித்த மாவட்டங்கள் வாரியாக ஆறு மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் பணியாற்றி வரும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு இ-பாஸ் எடுத்து திரும்பி வருகின்றனர். தற்போது சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பொது மக்கள் தவித்து வருகின்றனர்.
இதில், நாகை, கடலூர் மாவட்டங்கள் வெவ்வேறு மண்டலங்களில் வருவதால் இவ்விரண்டு மாவட்டங்களை இணைக்கும் இடமான கொள்ளிடம் பாலத்தில் காவல் துறையினர் சோதனைச்சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விரண்டு மாவட்டங்களையும் இணைக்கும்படி அமைந்துள்ள கொள்ளிடம் சோதனைச் சாவடியில் நடைபெறும் சோதனையில் இருந்து தப்பிக்க, சென்னையில் இருந்து வருபவர்கள் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்தின் வழியாக தங்களது ஊர்களுக்கு செல்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ,கொள்ளிடம் சோதனைச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் சென்னையிலிருந்து இ-பாஸ் இல்லாமல் காரில் வந்த இரண்டு பேரையும், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, அவர்கள் தனிமைப்படுத்துதல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : 'கரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை...!'