தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடை நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் ஊரடங்கு விதிமுறையை மீறி கடைகளை திறந்து வைத்ததாகக் கூறி காவல் துறையினர் இருவரையும் கடந்த 19ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 22ஆம் தேதி இரவில் பென்னிக்சும், 23ஆம் தேதி காலையில் ஜெயராஜூம் இறந்துவிட்டனர். காவல் துறையினர் தாக்கியதால்தான் இருவரும் இறந்த தகவல் தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இதற்கு காரணமான காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இதற்கிடையே மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த பிரச்னையை விசாரிக்க முடிவு செய்ததன் பேரில் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர்.
இதில், கோவில்பட்டி ஒன்றாவது மாஜிஸ்திரேட் சாத்தான்குளத்திற்கு நேரில் சென்று அங்கு சாட்சிகளிடம் நேரடி விசாரணை நடத்தி, அதை பதிவு செய்யவேண்டும்,கோவில்பட்டி சிறை, சாத்தான்குளம் காவல் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கு வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டிருந்தனர்.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகஸே்வரன் உயிரிழந்த ஜெயராஜ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி, மகள்களிடம் விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர், நடந்த சம்பவம் குறித்து காவலர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்ற ஆவண பதிவேடு உள்ளிட்டவைகளையும் அவர் ஆய்வு செய்தார்.