சேலம்: காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தடுமாறி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். பள்ளம் தோண்டப்பட்ட பகுதியைச் சுற்றிலும் அரசு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தால் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்காது.
மழைநீா் வடிகால் பணி: மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் துறையின் அமைச்சர், முதலமைச்சர் மற்றும் மேயர் ஆகியோர் மழைநீா் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறினர். ஆனால், இன்றுவரை பணிகள் நிறைவு பெறவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று 40 மாத காலமாக மழை நீர் வடிகால் பணியை நிறைவேற்றாமல் இருக்கின்றனர். இனியாவது அரசு துரிதமாக மழைநீர் வடிகால் பணியை நிறைவேற்ற வேண்டும்
செந்தில் பாலாஜி: செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஓராண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரைப்படி, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். உச்ச நீதிமன்ற நிபந்தனையை செந்தில் பாலாஜி மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை மு.க.ஸ்டாலின் அப்படி கூறாலாமா? ஈபிஎஸ் விமர்சனம்!
துணை முதலமைச்சர் பதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியுள்ளார். மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள் திமுகவில் உள்ளனா். அவர்களுக்கெல்லாம் துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் முதலமைச்சர் பதவி கிடைக்கும். திமுகவில் இன்பநிதி ஆட்சிக்கு வந்தாலும் ஏற்றுக்கொண்டு அடிமையாக இருப்பார்கள்.
வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் வந்தபோது வாரிசு அரசியல் நடைபெறுவதாக கருணாநிதி குற்றம்சாட்டிய நிலையில், அதேதான் தற்போது திமுகவிலும் நடக்கிறது.
உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவை எங்களுக்கு அதிமுகவுக்கான அங்கீகாரம் கொடுத்துவிட்டன. ஓபிஎஸ் என்பவா் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கப்பட்டவா். அதிமுக என்பது எங்கள் தரப்பு மட்டும் தான். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுக ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. கூட்டணி பலம் குறைவாக இருக்கும் நிலையிலும், அதிமுக கூடுதலாக வாக்கு பெற்றுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்