தருமபுரி மாவட்டம் தேவரசம்பட்டியை சேர்ந்தவர் திருவேங்கடமூர்த்தி. இவர் பியூட்டி பார்லர் வைத்து தொழில் செய்துவந்துள்ளார்.
தொழில் விரிவாக்கத்திற்காக தருமபுரி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் பைனான்ஸ் தொழில் நடத்திவரும் நாசர் என்பவரிடம் 40 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த கடன் தொகைக்கு இதுவரை 3 கோடியே 90 லட்ச ரூபாய் வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்தியுள்ளார்.
இருப்பினும், திருவேங்கடமூர்த்தி வாங்கிய கடனுக்கு நாசர் மேலும் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என மிரட்டி அழுத்தம் தந்துள்ளதாக அறிய முடியமுடிகிறது.
ஒரு கோடி ரூபாய் உன்னிடம் இல்லையென்றால் சிறுநீரகத்தை விற்றாவது தர வேண்டும் என நிர்பந்தித்து வந்துள்ளார்.
தொடர்ந்து நாசரால் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த திருவேங்கடமூர்த்தி, கந்துவட்டிக்காரர் நாசர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி தருமபுரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது.
இந்நிலையில், விரக்தியடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்னால் தனது தந்தையுடன் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொள்ள முயன்றுள்ளார்.
இதனை கண்ட அங்கிருந்த காவலர்கள் அவர்கள் இருவரையும் தடுத்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி உயிரைக்காப்பாற்றினர்.
இது தொடர்பாக ஊடங்கங்களிடையே பேசிய திருவேங்கடமூர்த்தி, " நான் வாங்கிய கடனுக்கு அதைவிட வட்டியும் கட்டி, அசலையும் அடைத்துவிட்டேன். இருந்தாலும் அது போதாதென தொடர்ந்து எங்களை அச்சுறுத்தி 3 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கும் மேல் எங்களிடம் பைனான்சியர் நாசர் அபகரித்துள்ளார்.
எங்கள் வீட்டையும் அபகரித்துக்கொண்ட அவர், மேலும் ஒரு கோடி ரூபாய் கேட்டு தொல்லை தந்து கொண்டிருக்கிறார்.
எனது தந்தை, எனது மனைவி இருவருடையை வங்கி காசோலைகளை வைத்துக்கொண்டு மிரட்டும் பைனான்சியர் மீது பலமுறை புகாரளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறி என்னையும், எனது குடும்பத்தாரையும் மிரட்டும் பைனான்சியர் நாசரிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்" என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.