லூயிஸ்வில் (அமெரிக்கா): கென்டக்கி மாகாணத்தின் லூயிஸ்வில்லில் ஒரு பூங்காவில் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரோனா டெய்லரின் மரணத்தை எதிர்த்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரவு 9 மணியளவில் ஜெபர்சன் ஸ்கொயர் பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக, லூயிஸ்வில் நகர கவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காண காவல் துறை முயற்சித்து வருகிறது எனவும் காவல் துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
டெய்லர் எனும் 26 வயதான கறுப்பினப் பெண், மார்ச் மாதம் தனது லூயிஸ்வில் வீட்டில், 'நோ நாக் வாரண்ட்' அதிகாரத்தின் மூலம் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'நோ நாக் வாரண்ட்' என்பது வீட்டில் உள்ளவர்கள் அனுமதி இல்லாமல் வீட்டை சோதனையிடலாம் என காவல் துறையினருக்கு நீதிபதி அளிக்கும் அதிகாரம் ஆகும்.
இதனையடுத்து அவரது மரணத்தில் தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போராட்டங்கள் வெடித்தன. இதற்கிடையில் ஒரு காவல் அலுவலரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.