கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் மத்திகிரி பகுதியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணை துணை இயக்குனர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததாக வெளியான தகவலையடுத்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சங்க தலைவர் ஸ்ரீராமுலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும், கறுப்புக் கொடி ஏந்தியும் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீராமுலு, “தற்பொழுது நிலவும் கரோனா அச்சுறுத்தலால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து உள்ள விவசாயிகளை மேலும் நசுக்கும் வகையில் மத்திய அரசானது இதுவரை வழங்கி வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற்று மீண்டும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் சார்பில் தக்க பாடம் புகட்டப்படும்” என மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.