திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் எதிரில் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள ’ஒரே நாடு ஒரே சந்தை’ என்ற சட்டத்தை எதிர்த்து, சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த சட்டமானது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், கார்ப்பரேட் கம்பெனிகள் பயன்படும் வகையில் இச்சட்டம் உள்ளது. எனவே சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, விவசாயிகள் விரோத சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்ட மசோதா 2020 திரும்பப் பெற வேண்டும், கரோனா பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு ரூபாய் 7500, மாநில அரசு 5,000 வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாள்களாக உயர்த்தி ரூபாய் 600 வழங்கவேண்டும், நாட்டின் பொதுத்துறை தனியார் மயமாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.