மத்திய அரசு விவசாயத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசியப் பொருள்கள் திருத்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. முன்னதாக அறிவித்த 2020 மின் திருத்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம், 11 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம், 8 லட்சம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கிவந்த 750 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கிவந்த 100 யூனிட் மின்சாரம் ஆகியவையும் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவற்றைக் கண்டித்தும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் குடும்பத்தினருக்கும் மத்திய அரசு 7,500 ரூபாயும், மாநில அரசு 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் சட்ட நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் எ. ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது .
இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், கரும்பு விவசாயிகள் சங்க அகில இந்தியத் தலைவருமான டி. ரவீந்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஞானசவுந்தரி, மாவட்டத் துணைத் தலைவர், விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர், பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று சட்ட நகலை எரிக்க முயன்றனர்.
இதேபோல, வாழப்பாடி பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எ. பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற நகல் எரிப்பு ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.