கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்திற்குட்பட்ட சின்னாளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (58). ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரான அவர், அண்மையில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்துப் பணிகள் தொடர்பில் கடவூர் வட்டாட்சியர் மைதீன் மீது தொடர்ந்து ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை சொல்லி வந்ததாக அறிய முடிகிறது.
ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சொல்லி வருவதால், பழனிச்சாமி மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பாலவிடுதி காவல் நிலையத்தில் கடவூர் வருவாய் அலுவலர் சத்தியமூர்த்தி புகார் அளித்துள்ளார்.
அரசு ஊழியர் மீது அவதூறு பரப்பியதாக பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்த பாலவிடுதி காவல்துறையினர் இன்று (ஜூன் 14) அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.