ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த நடுப்பாளையம் கிராமத்தில் சுமார் இரண்டராயிரம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் தினந்தோறும் பாலைக் கூட்டுறவு சங்கத்தில் விற்று வருகின்றனர்.
தற்போது அங்கு இரண்டு அரசு பால் கொள்முதல் நிலையங்களும், நான்கு தனியார் பால் கொள்முதல் நிலையங்களும் உள்ளன.
இந்நிலையில், தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை 32 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகக் குறைந்ததால் ஒரு லிட்டர் பாலில் குறைந்தபட்சம் 10 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி விவசாயிகள் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் செண்பகபுதூர் ஊராட்சி மன்றத்தில் விவசாயிகள், பால் கொள்முதலாளர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் பால் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் புவனேஸ்வரி, கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டாட்சியர் கணேசன், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், நோய்த் தொற்று காரணமாக மக்கள் பால் வாங்காமல் புறக்கணிப்பதால் தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், இயல்புநிலை திரும்பிய பின்னர் பாலுக்கு அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் அரசு சார்பில் உறுதிமொழி அளித்த பிறகு பேச்சுவார்த்தை முவுக்கு வந்தது.