ஈரோடு மாவட்டம் பெருந்துறை சேனிடோரியத்தில் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாடு அளவில் காசநோய்க்கு பிரபலமான மருத்துவமனையாக தற்போதும் விளங்கிவருகிறது.
இந்த மருத்துவமனையில் செவிலியர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
கரோனா காலத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் 490 ரூபாய் வழங்கப்படும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். கரோனா காலத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியமாக இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும். மூன்று மாதங்களாக விடுமுறை வழங்கப்படாதவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதனிடையே, அதிர்ச்சியளிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
பேரிடர் காலத்தில் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று மூன்று மாதங்களாக காத்திருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த வாரம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேச்சுவார்த்தையின்போது ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிக்கு எடுத்த கிரிஸ்டல் நிர்வாகம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 490 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். இரண்டு நாளில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவித்தது.
ஆனால், இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "கடந்த மூன்று மாதங்களாக உயிர் ஆபத்தையும் தாண்டி, குடும்பத்தைக் கவனிப்பதைக் கைவிட்டு நோயாளிகளைக் கவனித்து வந்தோம். ஆனால், எங்களிடம் வேலையைப் பெற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் தற்போது எங்களை கைவிட்டுவிட்டது" என வேதனை தெரிவித்தனர்.
மேலும் எங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: '5 மாசம் ஆச்சு; ஆனா கரோனா பிரச்னை முதலமைச்சருக்கு புரியல' - உதயநிதி காட்டம்