நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து உணவைத் தேடி உலா வருகின்றன. இந்நிலையில் இன்று குன்னூர் அருகேயுள்ள கிளிஞ்சாட கிராமத்திற்குள் புகுந்த யானைக்குட்டி உள்பட நான்கு காட்டு யானைகள் ராமச்சந்திரன் என்பவரின் குடியிருப்பை சேதப்படுத்தியது.
இதில் வீட்டில் வைத்திருந்த அரிசி உள்பட உணவுப் பொருள்கள் முழுவதையும் நாசம் ஆகின. மேலும் அருகில் உள்ள தோட்டத்தில் வாழை உள்ளிட்ட விவசாயப் பயிர்களையும் யானைக் கூட்டம் நாசப்படுத்தியது. இது தொடர்பாக கிராம மக்கள் வனத்துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் குந்தா வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவிகள் செய்வதுடன் யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.