மும்பை: பதஞ்சலி நிறுவனத்தின் 'கரோனில்' கோவிட்-19 நோயை குணப்படுத்தும் மருந்து கிடையாது என்றும் அவ்வாறு கூறி அதனை விளம்பரம் செய்தாலோ, விற்பனை செய்தாலோ தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்துகள் துறை அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே.
கரோனில் தயாரிப்பாளர்களால் ஏதேனும் தவறான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டால், 1954ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் மேஜிக் வைத்தியம் (ஆட்சேபிக்கக்கூடிய விளம்பரங்கள்) சட்டம் மூலம் மாநில உள்துறை துறையின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் மருந்துகள் துறை அமைச்சர் தெரிவித்தார்.
நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தான்; கரோனா மருந்து அல்ல!
பதஞ்சலி நிறுவனம் கரோனில் மருந்தை விற்பனை செய்யலாம், ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து என்ற பெயரில் தான் விற்பனை செய்யவேண்டும். கரோனாவுக்கான மருந்து கிடையாது என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மேலும், 'கரோனில்' என்ற பெயரின் மூலம் பொதுமக்கள் குழப்பம் அடைந்து வருவதாகவும், எனவே பதஞ்சலி நிறுவனம் மக்களின் குழப்பங்களையும், சந்தேகங்களையும் தீர்க்கும்படியான விளம்பரங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.