செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் மருத்துவர் சுகுமாரன். இவர் கரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி சிகிச்சைப் பெற்று வந்தார்.
ஆனால் தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமடைந்து வந்த நிலையில், ஜூன் 30ஆம் தேதி சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், செயலர் ஆகியோரின் மூலம் முதலமைச்சர் நிவாரண உதவித் தொகை மருத்துவரது குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், காப்பீட்டுத் தொகையாக 50 லட்சம் ரூபாய், மாநில அரசின் நிவாரணத் தொகை, உரிய அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு, மருத்துவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தியை வெளியிட்டதுடன் மருத்துவர் சுகுமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில அரசு மருத்துவர்கள் சங்கம் செய்திக் குறிப்பு வெளியிட்டு முதமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளது.