கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த இயலவில்லை. இருப்பினும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. இருந்தபோதிலும், ஜூன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அறிவித்துள்ளது.
ஆனால், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ‘கரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதால், பொதுத்தேர்வின்றி இன்டர்நெல் மதிப்பெண்களின் அடிப்படையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள்’ என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில்,“ கரோனாவால் 3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33 ஆயிரத்து 229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா?
நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் தெலங்கானா முதலமைச்சர் காட்டும் வழியையாவது தமிழ்நாடு முதலமைச்சர் பின்பற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.