தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேற்று (ஜூலை9) திடீர் ஆலோசனை நடத்தினார்.
உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் போடிநாயக்கனூர், உத்தமபாளையம் ஆகிய இரு தாலுகாவிற்கு உள்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கரோனா தொற்று வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள், அத்தியாவசிய, சாதாரண கடைகளை நேரக் கட்டுப்பாடுகளுடன் திறப்பது குறித்தும், தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்துவது, தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவது உள்ளிட்டவைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது கம்பம் நகரில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம், கரோனா வைரஸ் நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கம்பம் நகர் பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக வார்டு வாரியாக சென்று தற்போது காய்ச்சல், சளி உள்ளதா என மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையும் நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சமீபகாலமாக அதிகப்படியான காய்ச்சல் போன்ற நோய்கள் உருவாகி வருவதால் அதனை தடுக்கும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள், மருத்துவத் துறை சார்பாக உள்ள அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பொதுமக்களை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளியே வருபவர்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஆட்டோ, கார் ஓட்டுனர்களுக்கு காவல்துறை அறிவுரை!