நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் நவீன அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த அரிசி ஆலையில் சுற்று வட்டாரங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் வேக வைத்து அரைத்து அரிசியாக மாற்றப்படுகிறது.
அரிசியாக மாற்றப்படும் பொழுது உற்பத்தியாகும் கரித்துகள்கள் சாலையில் பறந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும், அரிசி ஆலையில் இருந்து வரும் கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் பொது மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதோடு நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொண்ட நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அரிசி ஆலையில் இருந்து வரும் கரித்துகள்கள் பறக்காமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரிசி ஆலையில் இருந்து வரும் கழிவுகளை விவசாய விளைநிலங்களில் விடாமல் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு முடிவில் கரித்துகள்கள் பறக்காமல் இருப்பதற்குக்கும், கழிவுநீர் விவசாய நிலங்களில் கலக்காமல் இருப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.