தூத்துக்குடியைச் சேர்ந்த அதிசயராஜ் என்பவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ஜூன் 19ஆம் தேதி சாத்தான்குளத்தில் காவ்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரழந்தது தொடர்பான வழக்கில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பல மாவட்ட காவல் ஆணையர்களும், கண்காணிப்பாளர்களும் சேவா பாரதியின் "ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு செயல்பட தற்காலிக தடை விதித்துவருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான சேவா பாரதி நடத்திவரும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பொதுமக்களுக்குச் சேவை செய்வதாகக் கூறி மக்களுக்குத் தொல்லை கொடுத்துவருகிறது. இந்து மதக் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில், பிற சமுதாய மக்கள் மீது அராஜக போக்குடன் செயல்பட்டுவருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் சாத்தான்குளத்தில் ஒன்பது கிறிஸ்தவ பாதிரியார்கள் மதப்பிரச்சாரம் செய்ததாக காவல் நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். எனவே, காவல் துறையுடன் இணைந்து சேவை என்ற பெயரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவரும் அந்த அமைப்புக்கு தமிழ்நாட்டில் நிரந்தர தடைவிதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற, மாநில மனித உரிமைகள் ஆணையப் பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு நிரந்தர தடைவிதிப்பது குறித்து தமிழ்நாடு அரசு, காவல் துறை இயக்குநர் ஆகியோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.