திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து வழங்கப்படும் தண்ணீரை பங்கீடுவதில் ராஜவாய்க்கால், குடகனாறு விவசாயிகளுக்கு இடையே சிக்கல் நிலவிவருகிறது.
ராஜவாய்க்கால் தண்ணீரை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் அரசு அலுவலர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாற்றுப்பாதை ஏற்படுத்தி குடகனாறு பகுதிக்குத் திருப்பிவிட்டதாகக் கூறி சித்தையன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், செங்கட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 60-கிராம பொதுமக்கள், விவசாயிகள் தெருக்களில் கறுப்புக் கொடி கட்டி போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதே சமயம் குடகனாறு பகுதியில் தங்களுக்கான தண்ணீரை வழங்கும்படி அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், பொன்மான்துறை பகுதி விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்நிலையில், ராஜவாய்க்கால் பிரச்னையை ஆய்வுசெய்து விசாரணை அறிக்கை தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற இரண்டு அலுவலர்கள் உள்பட ஆறு பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பொதுப்பணித் துறை ஓய்வுபெற்ற தலைமை செயற்பொறியாளர் இளங்கோவன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் காமராஜர் அணை அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தண்ணீர் வரும் ராஜவாய்க்காலை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
சுமார் 2 மணி நேரம் ஆய்வுக்குப் பிறகு வல்லுநர் குழுவினர் விரிவாக தங்கள் அறிக்கையை அரசுக்குத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தனர்.