12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்தில் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மே.30 முதல் ஜூலை.14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 37 வயதான தோனி இந்தத் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவார் எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் அடுத்த வருடம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து சிஎஸ்கே அணியின் முதன்மை நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாதன் கூறுகையில்,
"தோனி மீண்டும் அடுத்தாண்டு சென்னை அணியில் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் மோசமான ஃபார்மில் இருப்பதாக பலர் விமர்சித்துள்ளனர். ஆனால், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அவர் சிறப்பாகதான் பேட்டிங் செய்துள்ளார். கடந்த சீசனில் 16 போட்டிகளில் 3 அரைசதம் என 455 ரன்களை குவித்துள்ளார். அதேபோல, இந்த சீசனிலும் 15 போட்டிகளிலும் 83. 20 பேட்டிங் சராசரியுடன் 416 ரன்களை அடித்துள்ளார். இந்தப் புள்ளிகளின் அடிப்படையில் அவர் சிறப்பான ஃபார்மில்தான் உள்ளார். நிச்சயம் இந்த ஃபார்மை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரிலும் இந்திய அணிக்காக வெளிபடுத்துவார்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
முன்னதாக, ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி முடிவடைந்தப் பின்னர், அடுத்த ஆண்டு நிச்சயம், தான் ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் என்று தோனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத்து.