சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்கள பணியாளர்களான காவல்துறையினருக்கும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதன்படி, நேற்று வரை சென்னையில் 1155 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 462 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐஜி சிவனாண்டியிடம் ஓட்டுநராகப் பணியாற்றிய பட்டினப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் (57) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 11ஆம் தேதி குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்தார்.
இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு காவலர்களுக்கு வழங்கப்படும் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஒன்பது காவலர்கள் மூன்று முறை வானத்தை நோக்கி சுட்டு 27 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் பணிப்புரிந்த பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழ்நாடு டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் உயிரிழந்த மணினாறனுக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருமணம் செய்து வைக்காததால் தந்தையை கொன்ற மகன்