மழைக்காலத்தில் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால், அது தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அம்மனுவில், “திருத்துறைப்பூண்டியில் நகராட்சிக்குச் சொந்தமான 32 குளங்களும், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 14 குளங்களும் உள்ளன. இந்தக் குளங்களுக்கு மழைநீர் செல்வதற்கான வடிகால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களால் அடைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குளங்களில் ஐந்து குளங்கள் தனியார் மருத்துவமனையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுப்படுகிறது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாதம் தொடங்கவுள்ள மழைக்காலத்தில் தண்ணீர் குளங்களுக்குச் செல்ல முடியாமல் தெருக்களிலேயே தேங்கிவிடும். சுகாதாரமின்மை காரணமாக கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது.
முறையாகத் தூர்வாரும்படி திருத்துறைப்பூண்டி நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, இந்து சமய அறநிலையத் துறை ஆகியவற்றுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், முறையாக மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.