தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மீனாட்சியம்மன் கண்மாய். தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2020 -21ஆம் நிதியாண்டில் 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்மாய் கரைகள் பலப்படுத்துதல், தூர்வாருதல், வரத்துக் கால்வாய் ஓடைகள் சீரமைப்பு, நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் இந்த கண்மாயில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில் இந்தப் பணிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மற்றும் பொதுப்பணி, வருவாய் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். இந்த ஆய்வில் பராமரிப்பு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்த துணை முதலமைச்சர், பருவமழை தொடங்குவதற்கு முன் வேலைகளை முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனிடையே கரோனா நோய் அச்சத்தால் நாடு முழுவதும் ஐந்தாவது கட்ட பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சர் பங்கேற்ற இந்நிகழ்வில் அதிமுகவினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கூடியதால் தகுந்த இடைவெளி கேள்விக்குறியானது. கண்மாய் அருகே சாலையின் இருபுறமும் நூறு நாள் வேலைக்காக அழைத்து வரப்பட்ட பெண்கள், துணை முதலமைச்சரை வரவேற்க திரண்ட அதிமுகவினர் என அதிகம் பேர் கூடியதால் பொதுக்கூட்டம்போல அப்பகுதி மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
144 தடை உத்தரவு காலத்தில் 5 நபர்களுக்கு மேல் பொதுவெளியில் மக்கள் கூடக்கூடாது, தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்துள்ள நிலையில், துணை முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வில், கூடிய கூட்டத்தால் அரசின் விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்தன.