தமிழ்நாட்டில் இன்று (செப். 1) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மற்றொருபுறம், உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் ஆண்டுப் பெருவிழா பக்தர்கள் அனுமதி இன்றி நடைப்பெற்று வருகிறது.
அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவின்.பி.நாயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தற்போது ஆலய ஆண்டுத் திருவிழா நடைபெற்று வருவதால் பக்தர்களுக்கு அனுமதி அளித்தால் வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.
இதனால், வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி வரை வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு அனுமதி கிடையாது. எனவே வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ள தேர் பவனி, செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறும் கொடி இறக்க நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை.
இந்நிகழ்வுகளில் ஆலய நிர்வாகத்தினர், பாதிரியார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேளாங்கண்ணியை சுற்றியுள்ள பகுதிகளில் செப்டம்பர் 8ஆம் தேதி வரை விடுதிகள் திறக்கவும், கடற்கரைக்குச் செல்லவும் அனுமதி கிடையாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.