மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் திருவாரூர், நாகை மாவட்டத்துக்கு பாசனம் செய்யும் ஆறுகளுக்கு தண்ணீர் பாய்ச்சக்கூடிய நீடாமங்கலம் மூணாறு தலைப்பிற்கு இன்று தண்ணீர் வந்தடைந்தது. அங்கிருந்து அலுவலர்கள் திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறந்தனர்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 16ஆம் தேதி கல்லணைக்கு வந்த காவிரி நீர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்துக்காக திறக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மதியம் திருவாரூர், நாகை மாவட்ட கடைமடை பகுதிகளுக்கு பாசனம் அளிக்கும் மூணாறு தலைப்பிற்கு காவிரி நீர் வந்தடைந்தது. குறுவை சாகுபடிக்காக சுமார் 1550 கனஅடி வந்தடைந்த நிலையில், நீடாமங்கலம் மூணாறு தலைப்பு என்று அழைக்கக்கூடிய கோரையாறு தலைப்பிலிருந்து வெண்ணாற்றில் 1015 கனஅடி நீரும், கோரையாறில் 332 கனஅடி நீரும், பாமணி ஆற்றில் 203 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அலுவலர்கள் மூணாறு தலைப்பிலிருந்து காவிரி நீரை திறந்துவிட்டனர் என்பதும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் பாய்கின்ற ஆறுகளுக்கு தண்ணீரை நிலை நிறுத்தித் தரக்கூடிய முக்கியமான தடுப்பணை மூணாறு தலைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்டத்துக்கு தண்ணீர் வந்துள்ள நிலையில் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:காவிரி நீர் வந்துசேர குடிமராமத்துப் பணிகள் தீவிரம்!